Monday 12 August 2013

வசிஷ்டரின் பெருமை

வஸிஷ்டரின் பெருமை வாக்கிற்கெட்டாதது. மிகவும் அமைதியானவர். 

ஆனால் அனைத்து நற்செயல்களுக்கும் வித்தானவர். லோக ஷேமத்தை 

உத்தேசித்து பூமண்டலத்தில் வாழ்ந்து வந்தார். அருந்ததி என்ற 

கற்புக்கரசியை மனையாளாகக் கொண்டு இல்லறம் நடத்தி வந்தார். 

இல்லறம் நடத்தியபோதும் பற்றற்றவர்.

ஞானக்களஞ்சியமாய் அவர் உள்ளதைக் கண்டு ஆதிராஜனான மனு 

அவரைத் தனக்குப் புரோகிதராய் வரித்தார். மனுவிற்கு புத்திரகாமேஷ்டி 

நடத்திவைத்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தியவர். இக்ஷ்வாகு வம்சத்தில் 

வந்த மன்னர்களின் குறையனைத்தையும் தீர்த்து வைத்தவர்.


வஸிஷ்டரின் பெருமைகளைக் கூறாத இதிஹாஸ புராணங்கள் 

உலகிலில்லை. துச்சாதனன் என்ற வெறியன் த்ரௌபதியின் துயிலை 

அவிழ்க்க எண்ணுகையில் அவள் “கோவிந்தா!” என்று கதறினாள். அவளுக்கு 

அனந்த வஸ்திரங்கள் கிடைத்தன. அவள் மானம் காக்கப்பட்டது. அந்த 

த்ரௌபதிக்கும், “ஆபத்து காலங்களில் கோவிந்த நாமத்தை 

உரக்கக்கூறினால் நீ ரக்ஷிக்கப்படுவாய்” என்று உபதேசித்தது 

வஸிஷ்டர்தான். இவ்வாறு மஹாபாரதம் கூறுகிறது.

அனைத்தையும் தரவல்ல காமதேனுவையே தன் வீட்டில் வைத்துக் 

கொண்டும், தன் அக்கினி ஹோத்திரத்திற்காக வேண்டிய நெய்யை மட்டிலும் 

காமதேனுவிலிருந்து எடுத்துக் கொண்டார் வஸிஷ்டர். விஷயபோகங்களை 

எடுத்துக் கொள்ளவில்லை. அனைத்தையும் அருளவல்ல காமதேனுவும், 

அதன் கன்றான நந்தினியும் கூட வஸிஷ்டரின் அருளை வேண்டி, நாடி 

வஸிஷ்டர் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தன என்பது 

புராணப்பிரஸித்தம்.

விசுவாமித்திரன் என்கிற மன்னனும் கூட “தானும் வஸிஷ்டரைப் போல் 

ஆகவேண்டும்” என்கிற உத்வேகத்தால்தான் கடுமையான தவமியற்றி 

ப்ரும்ம ரிஷியானார். இவ்வாறு விசுவாமித்திரருக்கும் 

முன்னுதாரணமானவர்.

விசுவாமித்திரரையே பிரமிக்க வைக்கும் வண்ணம் வஸிஷ்டரின் ஒரே ஒரு 

ப்ரும்மதண்டம் விசுவாமித்திரர் செலுத்திய அனைத்து வஸ்திர 

சஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கியது.

வஸிஷ்டாஸ்ரமத்தைப் பற்றி ஸ்ரீஇராமாயணத்திலுள்ள வருணனையை 

இங்கு காண்போம். “வஸிஷ்டாஸ்ரமத்தில் கொல்லென்று மலர்கள் 

மலர்ந்துள்ளன. ஸித்தர்கள், சாரணர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், 

கின்னரர்கள் அனைவருமிருந்தனர். பல்வேறு பறவைகள் இருந்தன. 

ப்ரசாந்தமான மான் மந்தைகள் மேய்கின்றன. ப்ரும்மரிஷிகள் 

அவ்வாஸ்ரமத்தை அலங்கரிக்கின்றனர். அக்னிக்கீடாய் ஜ்வலிக்கும் 

தவயோகிகளும் ஸித்தர்களும் அவ்வாஸ்ரமத்திலிருந்தனர். காய்ந்த 

இலைகளை மட்டுமே தின்று வாழ்பவர்களும், தண்ணீர் மட்டுமே 

பருகுபவர்களும், காற்றை மட்டுமே தன் உணவாய்க் கொண்டவர்களும், 

காய்கனிகளை மட்டுமே உண்பவர்களும், ப்ரும்ம தேவனுக்கீடான தேஜஸ் 

கொண்ட ஸித்தர்களும் அங்கு விளங்கினர். அங்குள்ளவர்கள் மனவடக்கம் 

கொண்டவர்கள். கோபத்தையும், புலன்களையும் வென்றவர்கள். ராக 

த்வேஷங்கள் அற்றவர்கள்; நித்திய-திருப்தர்கள், ஜபம், ஹோமம் செய்யும் 

வாலகில்யர்களும், வைகானஸர்களும் அங்கு வாழ்ந்தனர். வஸிஷ்டரின் 

ஆஸ்ரமம் மற்றொரு ப்ரும்மலோகமாய் ஜ்வலிக்கிறது (இராமாயணம்-1)

மாந்தாதா, ஸத்யகீர்த்தி ஹரிச்சந்திரன், பகீரதன், இக்ஷ்வாகு, 

திலீபன, தசரதன் முதலிய மாமன்னர்களும் வஸிஷ்டாஸ்ரமத்தில் பயின்று 

வஸிஷ்டரால் உருவாக்கப்பட்டவர்களே ஸாக்ஷாத் பகவான் 

இராமச்சந்திரனே வஸிஷ்டரின் சிஷ்யன்தான். ஸர்வ சாஸ்திரங்களும் எந்த 

இறைவனைப் போற்றுகிறதோ, அந்த இறைவனின் அவதாரமான 

ஸ்ரீஇராமனுக்கும் சாஸ்திரங்களைத் தனியாகக் கற்க அவசியமுண்டோ? 

இல்லை.

இருப்பினும் மற்றவர்களுக்கு குரு மகிமையைக் காட்ட விரும்பி குருவிடம் 

அனைத்து சாஸ்திரங்களையும் கற்றார். களங்கமற்ற ஞானமுடைய 

ஸ்ரீஇராமன் குருமகிமையை உலகில் பிரகடனமாக்க வேண்டி ஒரு லீலை 

புரிந்தார். இதுவே யோக வாஸிஷ்டத்தில் விவரிக்கப்படுகிறது.

விசுவாமித்திரர் தன் வேள்வியைக் காக்க தசரதரிடம் வந்து ஸ்ரீஇராமனைக் 

கேட்டார். அப்போது தசரதர் தன்னுடைய ஒரு ஸேவகனை விட்டு 

ஸ்ரீஇராமனை அழைத்துவரச் சொன்னார். ஸேவகனும் தசரதரிடம் 

சொன்னார்: “குருகுலவாஸம் முடிந்து க்ஷேத்திராடனம் செய்து திரும்பிய 

ஸ்ரீஇராமனிடம் ஒரு பெரும் மாற்றம் தெரிந்தது. அவர் செயல்களில் 

ருசியற்றவாறு ஸதா மௌனத்திலேயே உள்ளார்.” இவ்வாறு கூறிவிட்டு 

ஸ்ரீஇராமனை அழைத்துவந்தார்.

ஸ்ரீஇராமன் அங்கு வந்து தந்தையையும், குருவையும், விசுவாமித்திரரையும் 

வணங்கினார். விசுவாமித்திரர் ஸ்ரீஇராமனை உற்று நோக்கினார். அவரின் 

முகத்தில் அமைதி தவழ்ந்தது. பற்றற்ற நிலை தெளிவாகத் தெரிந்தது. 

அவரின் கண்களிலுள்ள ஒளியால் அவையிலுள்ள அனைவரும் 

அமைதியானார்கள். ஸ்ரீஇராமனை, விசுவாமித்திரர், “இராமா! யாத்திரைகள் 

நன்கு நடந்தனவா?” என வினவினார்.

ஸ்ரீஇராமன் பதிலுரைத்தார் “என் தீர்த்த யாத்திரையில் நான் எத்தனையோ 

ஜனங்களையும், கிராமங்களையும், நகரங்களையும் கண்டேன். 

அண்டசராசரத்திலும் துலங்கும் ஓர் உண்மை யாதெனில்-



“அஸ்திரா: ஸர்வ ஏவைதே ஸசராசர சேஷ்டிகா:” ‘அனைத்தும் 

நிலையற்றது’ என்பதேயாம். ப்ரபஞ்சத்தில் காணும் ஸமஸ்த 

நாமரூபங்களும் நிலையற்றிருப்பினும் அஞ்ஞானத்தால் நிலைத்தன 

போலும், அகந்தையால் ஜீவனுடையது போலும் காட்சியளிப்பது 

விந்தையே.


இவை அனைத்தையும் உணர்ந்த நான் பற்றற்றுள்ளேன்.

நாபினந்தாமி மரணம் நாபினந்தாமி ஜீவிதம்

யதா திஷ்டாமி திஷ்டாமி ததைவ விகதஜ்வர:

எதிலும் விருப்பு-வெறுப்பு இல்லை. மரணத்திலும் பற்றில்லை. வாழ்விலும் 

பற்றில்லை. இருந்தபடி இருக்கிறேன். எந்தச் செயலிலும் ருசியில்லை. 

ஆசை என்கிற நோயுமில்லை.”

இதைக் கேட்டு தேவர்கள் ஸ்ரீஇராமன் மேல் புஷ்பவர்ஷம் செய்தனர். 

ஸ்ரீஇராமனின் பற்றற்ற நிலையைப் போற்றினர். உடனே விசுவாமித்திரர் 

கூறினார். “இராமா! உன்னிடம் அனைத்துமுள்ளன. தனியாக உனக்கு யாரும் 

புகட்டவேண்டிய பாடமேதுமில்லை. உனக்குள்ளேயே உள்ள ஞானத்தை 

சிஷ்டரான வஸிஷ்ட முனிவர் வெளியில் கொண்டுவரட்டும்.

ரகூனாமேஷ ஸர்வேஷாம் ப்ரபு: குலகுரு: ஸதா


ஸர்வக்ஞ: ஸர்வஸாக்ஷீ ச த்ரிகாலாமலதர்சன:

“இராமா! இம்முனிவர் இக்ஷ்வாகு வம்சத்திற்கே குலகுரு; ஸர்வக்ஞர்; 

ஸர்வஸாக்ஷி; த்ரிகால ஞானி.”

“முனிவரே! எங்கு தங்களைப் போன்ற ஞானியர், புனிதர், பற்று, அச்சம், 

குரோதம் தவிர்த்தவர் உபதேசிக்கின்றனரோ, அங்கு ஸ்ரீஇராமனைப் போன்ற 

சற்சீடர்களுக்கு உள்ளம் விஸ்ராந்தியை அடையும். ஸ்ரீஇராமன் 

அப்பழுக்கற்றவன். அவனுக்கு நீர் செய்யும் உபதேசம் வீணாகாது. சுத்தமான 

கண்ணாடியில் முயற்சி ஏதுமற்றே உருவம் தெரிகிறதல்லவா?”

விசுவாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்கி வஸிஷ்டர் ஸ்ரீஇராமனுக்கு 

விஸ்தாரமாய் உபதேசித்தார். அதுவே யோகவாஸிஷ்டம் என்று புகழ்பெற்ற 

சாஸ்திரமாகும். அதுவும் வால்மீகி இராமாயணம் அளவிற்கு மிகப்பெரிய 

நூல். இருபத்தி ஐயாயிரம் ஸ்லோகங்களுக்கும் மேற்பட்டது. அனைத்தும் 

வேதாந்த உபதேசம். அதிலிருந்து சில துளிகளைக் காண்போம்:

அவித்யமானசித்தஸ்த்வம் ஸத்வஸம்ஸ்காரமாகத:


ப்ரவாஹபதிதேஷ்வேவ ஸ்பந்தஸ்வ ஸ்வேஷு கர்மஸு

எண்ண அலைகளில் மாட்டிக் கொள்ளாமல், சுத்த ஸத்வத்தில் நிலை 

பெற்றவனாய், பிரவாகமாய் ஓடும் உன் செயல்களில் பற்றற்றுச் 

செயல்படு.

கம்ய தேசைக நிஷ்டஸ்ய யதா பாந்தஸ்ய பாதயோ:


ஸ்பந்தோ விகத ஸங்கல் பஸ்ததா ஸ்பந்தஸ்வ கர்மஸு

செல்ல வேண்டிய இடம் நிர்ணயமான வழிப்போக்கனுக்கு எந்த 

சங்கல்ப-விகல்பமுமற்று எப்படி பாதங்கள் சலிக்கின்றனவோ அப்படி 

செயல்படு.

ஸர்வ கர்ம பலாபோகமலம் விஸ்ம்ருத்ய ஸுப்தவத்

ப்ரவாஹபதிதே கார்யே ஸ்பந்தஸ்வ கதவேதனம்

கர்ம-பல-போகங்களை உருவாக்கும் அழுக்கை அறவே மறந்து, 

உறங்குபவனைப் போல் சித்த சலனமற்று, ஸ்வானுபூதியில் 

நிலைபெற்று செயல்களில் சலனம் கொள்.

ரஸபாவமனமந்தஸ்தே மாலம் பவது கர்மஸு

தாருயந்த்ரமயஸ்யேவ பரார்த்தமிவ குர்வத:

மற்றோருக்காகவே செயலைச் செய்; உள்ளே நிலைபெறு 

சைதன்யரஸம் செயல்களில் பற்றுவடிவில் சிதறுவது போலாக 

வேண்டாம். இயந்திரம் இயங்குவது போல் இறைபணிக்காக இயங்கு.

கர்தவ்யமஸ்தி ந மமேஹஹி கிஞ்சிதேவ

ஸ்தாதவ்யமித்யதிமனா புவி ஸம்ஸ்திதோஸ்மி

ஸம்சாந்தயா ஸததஸுப்ததியைவ வ்ருத்யா

கார்யம் கரோமி ந ச கிஞ்சிதஹம் கரோமி

“இராமா! என்னைக் காண்பாய். எனக்குச் செய்ய வேண்டியது 

ஏதுமில்லை. ஏதோவொரு செயலால்தான் நான் பூர்ணமாக 

வேண்டுமென்கிற அவசியமுமில்லை. உணர்ச்சிகளுக்கு வசப்படாமல் 

இருக்க வேண்டும் என்று இருந்து வருகிறேன். சாந்தமான 

வ்ருத்திகளைக் கொண்டு லோக«க்ஷமமான செயல்களை மட்டுமே 

செய்து வருகிறேன். அச்செயல்களிலும் கூட எனக்குப் பற்றில்லை. 

இப்படியே நீயும் செயல்களைச் செய்தாலும் அவற்றில் பற்றற்று வாழ்.”

ஸ்ரீஇராமன் வஸிஷ்டரின் உபதேசங்களை உள் நிறுத்தி சிறந்த கர்ம 

வீரனானார். வஸிஷ்டருக்கு இவ்வளவு பெருமைகள் உள்ளன.

வஸிஷ்டர் பரம்பரையே குருபரம்பரை. இதிலுள்ள ஒவ்வொருவரும் 

மஹான்கள். நாராயணன் ப்ரும்ம தேவனுக்கு ப்ரும்ம வித்யையை 

உபதேசித்தார். வஸிஷ்டர் பிரும்மாவின் சீடரும், புத்திரருமாவார். அவரின் 

உபதேசமே யோக வாஸிஷ்டம். அவரின் புத்திரர் சக்தி. சக்தியின் 

புத்திரராயும், வஸிஷ்டரின் சிஷ்யராயும் தோன்றியவர் பராசரர். இவர் 

ஸ்ரீவிஷ்ணுபுராணம் மூலமாக வேதாந்தத்தை விஸ்தரித்தார். இவரின் 

தவப்புதல்வர் வேதவ்யாஸரே ப்ரும்மஸாத்திரங்களையும் 

மஹாபாரதத்தையும், புராணங்களையும் அருளிச்செய்தார்.

வேதவ்யாஸரின் சிஷ்யர் சுகர் பாகவதபுராணத்தைத் தந்தவர். அவரின் 

சிஷ்யர் கௌடபாதர் ‘மாண்டூக்ய காரிகை’ என்னும் அரிய வேதாந்த நூலை 

அருளிச்செய்தவர்.

No comments:

Post a Comment